கருப்பசாமி பாடலை கேட்டு சாமி வந்து ஆடிய மாணவிகள் புதுக்கோட்டை:தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் புதுக்கோட்டை நகர் மன்றத்தில் கலைச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பரதநாட்டியம், கரகாட்டம், நாட்டுப்புற நடனம் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மிகவும் விமரிசையாக நடைபெற்றன.
இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் தலைவர் வாகை சந்திரசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் மற்றும் நாட்டுப்புற நடனங்களையும் கிராமியப் பாடல்களையும் கண்டு ரசித்தனர்.
அப்போது மேடையில் நாட்டுப்புற கலைஞர்கள் “அங்கே இடி முழங்குது” என்ற கருப்பசாமி குறித்த நாட்டுப்புறப் பாடலைப் பாட அதற்கு கருப்பசாமி போல் வேடம் அணிந்த கலைஞர் ஒருவர் தத்ரூபமாக நடனம் ஆடினார். அந்த நடனமும் பாடலும் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.
இந்நிலையில் பார்வையாளர் பகுதியில் இருந்த ஐந்திற்கும் மேற்பட்ட மாணவிகள் சாமி வந்தது போல் ஆடியதால் விழா நடந்த நிகழ்வு இடமே பரபரப்பாக காணப்பட்டது. அதன்பின் பாடல் முடிந்ததும் மாணவ மாணவிகளை சமாதானப்படுத்தி அவர்களை தண்ணீர் கொடுத்து அமர வைத்து ஆசிரியர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பயங்கரமான ஆளுங்க பாஸ்.. அங்காளம்மன் கோயிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்..