தாத்தா, பாட்டி கொடுமை:5ம் வகுப்பு மாணவன் கலெக்டரிடம் புகார் புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜா - தேன்மொழி. இவர்களது மகன் விஸ்வராஜ், இவர் 5ம் வகுப்பு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மேலும், விஸ்வராஜின் தகப்பனார் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
பூங்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கருப்பையா, மனைவி சாந்தாயி இருவரும் சேர்ந்து பேரன் விஸ்வராஜ் மற்றும் மருமகள் தேன்மொழி இருவரையும் தொடர்ந்து துன்புறுத்தி, இவர்களிடம் பிரச்னை செய்து வருவதாகவும், சொத்து முழுவதையும் தனது மகளுக்குத் தான் தருவேன் என்றும், கூறி மருமகள் தேன்மொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவ்வப்போது தாக்கப்படுவதாகவும் தெரிய வருகிறது.
இதனையடுத்து தனது தாத்தா மற்றும் அப்பாயி(பாட்டி) இருவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5ம் வகுப்பு படித்து வரும் விஸ்வராஜ் இன்று (10.07.2023), புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தனியாக வந்து, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனுவை வழங்கினார்.
இதையும் படிங்க:West Bengal Panchayat Election: 696 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - அமித் ஷாவை சந்திக்கிறார் ஆளுநர்!
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் படித்துப் பார்த்து, அந்த சிறுவனிடம் விசாரித்தபோது தொடர்ந்து தனது தாத்தா, பாட்டி இருவரும் தன்னிடமும், தனது தாயிடமும் பிரச்னை செய்வதாகவும், அதுமட்டுமில்லாமல் அடிப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக ஏற்கனவே சைல்டு லைன் அமைப்பில் புகார் கூறியிருந்தேன். அவர்கள் நேரில் வந்து விசாரணை செய்த பின்பும்; மீண்டும் தாத்தா எங்களை மிரட்டியதாக மாவட்ட ஆட்சியரிடம் கூறினார்.
இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரை வரவழைத்து, இந்த சிறுவனை விசாரிக்கும் படியும், மேலும் விசாரணை மேற்கொண்ட பிறகு தன்னிடம் தகவல் தெரிவிக்கும் படியும் உடன் இருந்த அரசு அதிகாரிகளிடம் கூறினார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட சிறுவன் விஸ்வராஜிடம் நாம் பேசிய போது, ''பூங்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவரான எனது தாத்தா கருப்பையா மற்றும் எனது பாட்டி சாந்தாயி இருவரும் சேர்ந்து என்னையும், எனது தாய் தேன்மொழி இருவரையும் கொடுமைப்படுத்தி துன்புறுத்தி வந்தனர். மேலும் எங்களைக் கொன்று விடுவதாகக் கூறி வருகின்றனர்.
எனவே, இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, அவர்களுடைய கைப்பேசி எண்ணையும் கொடுத்துள்ளார். இதன் பின்னரும் ஏதாவது தொந்தரவு செய்தால் உடனடியாக அணுகும்படி கூறியுள்ளார்'' என்றார்.
இதையும் படிங்க:'வேலையில்லா பட்டதாரி'யில் புகைப்பிடித்த விவகாரம் - நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!