அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி இன்று, புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பில் 23,689, 11 ஆம் வகுப்பில் 19,443 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஜிங்க் மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே பயின்று வரும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள் அமரவைக்கப்படுவதுடன், கட்டாயமாக முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வராத மாணவர்களுக்கு, அந்தந்தப் பள்ளிகளிலேயே இலவச முகக்கவசம் வழங்கப்படுகின்றன. அதேபோன்று கை கழுவும் வசதி, கை கழுவும் திரவம் உள்ளிட்ட தேவையான கரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதுடன், ஆசிரியர்களும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளின் படி மாணவர்களுக்கு பாடங்களை எடுத்து வருகின்றனர்.