புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் அருகேவுள்ள போயாடிகோட்டை கிராமப் பகுதியில் இன்று (ஜூன் 12) காலை பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது எனவும்; இதுவே மேற்கண்ட பெருஞ்சத்தத்திற்குக் காரணம் எனவும் அப்பகுதியில் தகவல் பரவியது. இந்தத்தகவலின் பேரில் அப்பகுதி மக்கள் பயங்கர சத்தம் கேட்டப்பகுதிக்கு ஆர்வத்துடன் குவிந்தனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை என அனைத்து துறையினருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் அத்தனை அதிகாரிகளும் வந்து சம்பவம் நடந்த பகுதியில் பார்வையிட்டபோது அதற்கான எந்தவிதமான அறிகுறியோ தடயமோ இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.
இதுகுறித்து அறந்தாங்கி ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்ட்டின்லூதர் கிங்கிடம் கேட்டபோது, 'காலையில் சுமார் 10.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் இப்பகுதியில் உள்ள வசந்தனூர் கண்மாயின் உட்புறப்பகுதியில் உள்ள புதர்கள், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தீப்பற்றி எரிந்து உள்ளது.
அதேவேளை, அப்பகுதியில் பெரும் சத்தம் கேட்க ராணுவத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது என அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் செய்தி பரவியது. தகவலின் அடிப்படையில் நாங்கள் வந்து சோதனை செய்தபோது அதற்குண்டான எந்தவிதமான தடயங்களும் இல்லை' எனக் கூறினார்.