புதுக்கோட்டை: விராலிமலை அருகே உள்ள பொதியகோன்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த நண்பர்களான கோவிந்தராஜ், சதிஷ், ராம்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான்கு பேரும் அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளியில் படித்து கொண்டே வருமானத்தை ஈட்ட வேண்டும் என்றும், கிடைக்கும் அந்த வருமானத்தில் குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
இதற்கு முதலீடு இல்லாமல் என்ன தொழில் செய்வது என்று நான்கு பேரும் கூடி விவாதித்த போது நுங்கு விற்பது என்ற யோசனை தோன்றியது. தற்போது கோடைக்காலம் என்பதால் நுங்கு விற்பனையில் தங்களின் கடின உடல் உழைப்பை தந்தால் கண்டிப்பாக தகுந்த கூலி கிடைக்கும் என்று நான்கு நண்பர்களும் முடிவு செய்தனர்.
இதனையடுத்து நான்கு பேரும் காட்டுப் பகுதியில் வளர்ந்து நிற்கும் எவர் ஒருவரின் உதவியில்லாமல் பனை மரத்தில் ஏறி நுங்குகளை பறித்து அதை சைக்கிள் கட்டிக் கொண்டு வந்து விராலிமலை - கீரனூர் சாலையோரம் தங்கள் ஊருக்கு அருகே வைத்து அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நுங்கு வியாபாரத்தில் கிடைக்கும் வருமானத்தை நான்கு பேரும் பிரித்து கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் தனக்காக எதுவும் செலவு செய்து கொள்ளாமல் தங்களுடைய தாய், தந்தையை நினைத்து குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த வருமானத்தை அன்று மாலையே தாயிடம் அப்படியே கொடுத்து விடுகின்றனர்.