தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நோட்டாவிற்கே வாக்களிப்போம்! சிதைக்கப்பட்ட புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி.. தொகுதி சீரமைப்பால் தவிக்கும் மக்களின் ஆதங்கம்! - Pudukkottai News in Tamil

தொகுதி மறு சீரமைப்பில் நாடாளுமன்ற தொகுதி அந்தஸ்து பறிபோனதால், தனித்தனியாக 4 மாவட்ட எம்பிக்களை சந்திக்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். 'எங்களது நாடாளுமன்ற தொகுதியை எங்களிடமே கொடுத்து விடுங்கள்' என குமுறும் புதுக்கோட்டை மக்களின் கோரிக்கை நிறைவேறுமா? மக்களின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மீண்டும் உதயமாகுமா? என அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு...

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 8:53 AM IST

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி சிறப்பு செய்தித் தொகுப்பு

புதுக்கோட்டை:சுதந்திர இந்தியாவில் 'புதுக்கோட்டை சமஸ்தானம்' இணைக்கப்பட்டபோது, சமஸ்தானத்தின் கஜானா முதல் பழமையான கட்டடங்களும் நாட்டுக்காக வழங்கப்பட்டன. இன்றும் அந்த கட்டடங்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு அலுவலகங்கள், நகர்மன்றம், மருத்துவமனைகள் இவ்வாறு பல அரசு அலுவலக கட்டடங்கள் தொண்டைமான் மன்னர்களால் கட்டப்பட்டவை

இத்தனை பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், 1951ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றாக திகழ்ந்தது.

சிதறிப்போன புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி:ஆனால், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 'தொகுதி மறு சீரமைப்பு' செய்தபோது, புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி அந்தஸ்து பறிபோனது. இந்த மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, விராலிமலை, அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் ஆலங்குடி, திருமயம் ஆகிய தொகுதிகள் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியிலும், விராலிமலை தொகுதி கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும், கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை திருச்சி நாடாளுமன்ற தொகுதியிலும் சேர்க்கப்பட்டது.

இதனால், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் 4 மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியின் அடையாளத்தை காணாமல் செய்தவர்களை கண்டித்தும், மீண்டும் தொகுதி வேண்டும் என்று தன்னார்வலர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.

மீண்டும் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி வேண்டும்; இல்லையெனில் 'நோட்டா' தான்:இருப்பினும், கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதால் எதிர்ப்பைக் காட்ட 49-(O) என்ற நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை செலுத்துவோம் என்ற பிரசாரங்கள் அப்போது சூடுபிடித்தன. 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 680 பேர் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை பதிவு செய்து எதிர்ப்பை காட்டினர்.

முந்தைய காலத்தில் தமிழக மாநில தேர்தல் ஆணையம், 49-(O) என்ற விதியின் படி வாக்குச்சாவடி அதிகாரியிடம் சென்று யாருக்காவது வாக்களிக்க விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டு, அதற்கான படிவத்தை வாங்கி (எண் 17 - A) பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வாக்களிக்க மறுத்துவிட்டனர் என்று பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். இந்த தேர்தல் விதி 1961-ல் கொண்டு வரப்பட்டதாகும்.

அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டு தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்து 932 வாக்குகள் நோட்டாவிற்கு அளித்தும் போராட்டத்தின் உஷ்ணம் குறையவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் மீண்டும் சுமார் 10,000 வாக்குகளை நோட்டாவிற்கு செலுத்தினர். இத்தனை எதிர்ப்புகளை காட்டியும் கூட தொகுதியை மீட்க முடியவில்லை என்ற விரக்தி புதுக்கோட்டை மாவட்ட மக்களிடம் இன்றைக்கும் இருக்கிறது.

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை வென்றவர்கள்:

  • 1951 - கே.எம்.வல்லத்தரசு (கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி)
  • 1957 - எஃப்.ராமநாதன் செட்டியார் (காங்கிரஸ்)
  • 1962, 1967 - ஆர்.உமாநாத் (இந்திய பொதுவுடமைக் கட்சி)
  • 1971 - கே.வீரய்யா (திமுக)
  • 1977 - வி.எஸ்.இளஞ்செழியன் (அதிமுக)
  • 1980 - வி.என்.சாமிநாதன் (காங்கிரஸ்)
  • 1984, 1989, 1991 - என்.சுந்தரராசு (காங்கிரஸ்)
  • 1996 - திருச்சி என்.சிவா (திமுக)
  • 1998 - ராஜா பரமசிவம் (அதிமுக)
  • 1999 - எஸ் திருநாவுக்கரசு (எம்ஜிஆர் அதிமுக)
  • 2004 - எஸ்.ரகுபதி (திமுக)

புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்களின் குமுறலுக்கு தேர்தல் ஆணையம் செவி சாய்க்குமா? என்பதை காலம் தான் பதில் சொல்லும். இதுகுறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய புதுக்கோட்டை மக்களின் மனக்குமுறலை காணலாம்.

6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தும் ஒரு நாடாளுமன்ற தொகுதி இல்லை:புதுக்கோட்டையை சேர்ந்த சரவணன் என்பவர் கூறுகையில், 'கடந்த 2009 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி பறிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற தொகுதி இல்லாததால், புதுக்கோட்டை மாவட்டம் மிகவும் வறட்சி அடைந்த மாவட்டமாக மாறி உள்ளது.

ஏனென்றால், மத்திய அரசின் எந்த ஒரு திட்டங்களும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்து சேரவில்லை. மேலும், புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் 4 நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 6 சட்டமன்ற தொகுதிகளை நான்கு நாடாளுமன்ற தொகுதிகளாக பிரித்துள்ளதால், இந்த மாவட்டம் வளர்ச்சி அடையவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் மீண்டும் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி கிடைக்கப்பெற வேண்டும்.

புதுக்கோட்டைக்கு எம்பிக்கள் செய்த பணிகள் என்ன?:மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதே நிலைமை நீடித்தால், பொதுமக்கள் அனைவரும் நோட்டாவிற்கு வாக்களிக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதி பொதுமக்களுக்கு வந்து சேர வேண்டும். ஆனால், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இந்த நிதி வந்து சேர்வதில்லை.

ஒரு தொழில் நிறுவனம் வரவேண்டும் என்று சொன்னால் நான்கு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த 4 நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வியும் உள்ளது. புதுக்கோட்டையில் எந்த ஒரு நிறுவனங்களோ, அரசு துறை நிறுவனங்களோ இல்லை. புதுக்கோட்டை மாவட்டம் ஒரு வறட்சி அடைந்த மாவட்டம், இங்கு அந்த அளவிற்கு விவசாயமும் இல்லை.

திமுக ஆட்சியில் இழந்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்டுக்கொடுப்பாரா?:புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்டெடுப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு அதிகமாக உள்ளது. மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு ஒரு திட்டம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது, புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எந்த நாடாளுமன்ற உறுப்பினரை சென்று சந்திப்பார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை முந்திரிப் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை விளைவித்து ஏற்றுமதி செய்ய வேண்டும். இதற்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எந்த நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க வேண்டும். எனவே, இதற்கு அரசியல் கட்சிகள்தான் முழுப்பொறுப்பு.

அரசியல் கட்சிகள் வாக்குகளை பிரிக்கத்தான் பார்க்கிறார்களே தவிர, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எண்ணம் அவர்களுக்கு இல்லை. கடந்த 2009-ல் திமுக ஆட்சியின்போது தான் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி பறிபோனது. தற்பொழுதும் திமுகதான் ஆட்சியில் உள்ளது. இப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்டுக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது' என்றார்.

தொழில்வளம் பெற நாடாளுமன்ற தொகுதி அவசியம்:சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் கூறுகையில்,'புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி 1951 முதல் 2004 வரை இருந்து வந்தது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி சீரமைப்பு காரணமாக அது பறிக்கப்பட்டது. சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி காணாமல் போனது போல, புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து காணாமல் போய்விட்டது.

இதை அனைத்து கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து முயற்சித்தால் கண்டிப்பாக புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை நாம் அடைய முடியும். புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் இருந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளும் சிதறி கிடக்கின்றன. இதனால், மக்கள் பிரதிநிதிகளை சென்று சந்திப்பது சாத்தியக்கூறு இல்லாமல் ஆகிவிட்டது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய எந்தவித அரசு சலுகைகளும் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் வந்து சேரவில்லை.

இதில் கட்சி, மத, சாதிய பாகுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தொகுதியை மீட்டெடுப்பது நிச்சயம் இது சாத்தியம். தமிழர்களின் பண்பாடு என்பது கொடுத்ததை திருப்பி கேட்பதில்லை. ஆனால், இது பறிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்வளம் மேம்பாடு அடைய வேண்டுமென்றால், தொகுதி மீட்டெடுக்கப்பட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டமாக இருந்த புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி பறிக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரிய விஷயம்' என்றார்.

அனைவரும் இணைந்து செயல்பட்டால் சாத்தியம்: தொடர்ந்து பேசிய புதுக்கோட்டையை சேர்ந்த சுதாகர்,'புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாடாளுமன்ற தொகுதி இல்லாததால் மிகுந்த சிரமமாக உள்ளது.1951 முதல் 2004 வரை புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி இருந்தது. இந்த தொகுதியை மாறி மாறி காங்கிரஸ் கைப்பற்றி இருந்தது.

இதற்கு பிறகு திமுகவும், அதிமுகவும் இந்த தொகுதியை கைப்பற்றி இருந்தம. 2004 இல் திமுகவைச் சேர்ந்த ரகுபதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த தொகுதி பறிபோனது. அருகில் உள்ள மாவட்டமான மயிலாடுதுறையில் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், ஒரு நாடாளுமன்ற தொகுதி உள்ளது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தும் ஒரு நாடாளுமன்ற தொகுதியை பெற முடியவில்லை. இதில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயம் தொகுதியை மீட்டெடுக்க முடியும்.

"திருநாவுக்கரசர் எம்பி தொகுதி பக்கமே வருவதில்லை":வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை நோட்டாவிற்கு பதிவு செய்தால் மட்டுமே, நாம் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை பெற முடியும். தற்பொழுது உள்ள திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொகுதி பக்கம் வருவதே இல்லை. அவரை சந்திக்க வேண்டும் என்றாலும் கூட நாம் திருச்சிக்கு தான் செல்ல வேண்டும். இதனால், புதுக்கோட்டை மாவட்டம் வளர்ச்சி அடைய முடியவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் வளர்ச்சி அடையாமல், குப்பையாகவே உள்ளது. கூடுதல் ரயில்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. புதுக்கோட்டை நகர் பகுதி வளர்ச்சி அடையாமல் தான் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்தவித ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. புதுக்கோட்டையை பொருத்தவரை மின்விளக்குகள் அமைப்பதும், பேருந்து நிறுத்தம் அமைப்பதுமே நாடாளுமன்ற உறுப்பினர் பணியாக உள்ளது.

புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்: மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், எந்தவித வளர்ச்சியும் இல்லை. முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது முன்னோக்கி சென்ற மாவட்டம், தற்போது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

எந்தவித தொழில் வளர்ச்சியும் இல்லை. சிப்காட், சிட்கோ என்ற தொழில் நிறுவனங்கள் இருக்கிறது. ஆனால், தற்போது எந்த தொழிற்சாலைகளும் புதிதாக அமைக்கப்படவில்லை. புதிய தொழிற்சாலைகள் அமையப்பட்டால் தான் தொழில்துறையில் முதன்மையான மாவட்டமாக வர முடியும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாமானிய பொதுமக்கள் தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சென்னை, திருப்பூர், பெங்களூர் போன்ற பெருநகரங்களை தேடி அலைகின்றனர். ஆகவே பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் புதுக்கோட்டையில் அமையப் பெற வேண்டும். அதற்கு புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மீட்டெடுக்கப்பட வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனம் வைத்தால் சாத்தியம்: தற்போதுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனது வைத்தால் நிச்சயம் நடைபெறும். திராவிட மாடலில் வேகமாக உள்ள மு.க.ஸ்டாலின், தொகுதியை மீட்டெடுத்து வேட்பாளர்களை நிறுத்தினால் நாங்கள் நிச்சயம் அந்த வேட்பாளரை வெற்றியடைய செய்வோம்' என்றார்.

இதையும் படிங்க:மீண்டும் டோல்கேட் கட்டணம் உயர்வு.. கலக்கத்தில் லாரி உரிமையாளர்கள்.. எந்தெந்த வாகனத்திற்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?

ABOUT THE AUTHOR

...view details