புதுக்கோட்டை: தமிழ்நாட்டிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலுக்கும், வரலாற்றிற்கும் பெயர்பெற்றது புதுக்கோட்டை மாவட்டம். புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் பொற்பனைக்கோட்டை என்ற சிதிலமடைந்த செங்கல் கோட்டை உள்ளது.
இக்கோட்டையின் நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்களுக்குக் கோயில்கள் உள்ளன. கோட்டையின் கிழக்குப்பகுதியில் பெரிய வாரிக் கரையில் பழமைவாய்ந்த கீழக்கோட்டை ஆதி முனிஸ்வரர் ஆலயமும், மேற்குப் பகுதியில் மேலக்கோட்டை முனீஸ்வரர் ஆலையமும், வடக்குப் பகுதியில் காளியம்மன் ஆலயமும், தெற்கே ஐயனார் ஆலயமும் உள்ளன.
புதைந்துக் கிடக்கும் வரலாறு இதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோயில்களில், அருள்மிகு முனீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். இக்கோயிலானது புதுக்கோட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், திருவரங்குளத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பொற்பனைக்கோட்டை கோயிலைப் பொறுத்தவரை கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டது.
அதற்குக் காரணம் என்னவென்றால் திருவரங்குளத்தில் உள்ள சிவன் கோயில், அதன் கட்டமைப்பு, வரலாற்றை ஆய்வு செய்தபோது அந்தக் கோயில், சுற்றுவட்டாரத்தில் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பது காலக் கணிப்பாகும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொற்பனைக்கோட்டை நடுவிலுள்ள பொய்கை குளக்கரையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு மூலம், பொற்பனைக் கோட்டை 2000 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்தது.
கல்வெட்டு ஆராய்ச்சிகள்
அதன் பிறகுதான் கல்வெட்டு ஆய்வாளர்களும் விழித்துக் கொண்டதைத் தொடர்ந்து, பொற்பனைக்கோட்டையின் பல பகுதிகளிலும் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இதனை புதுக்கோட்டையில் இயங்கிவரும் தொல்லியல் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த மணிகண்டன், கரு. ராஜேந்திரன் மற்றும் குழுவினர் தொடர்ந்து ஆய்வுசெய்தனர்.
அப்போது கோட்டையின் கட்டுமான சுவர்களிலிருந்த செங்கற்களின் அளவுகளைப் பார்க்கும்போது, இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது, அதாவது 2300 முதல் 2500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என்றும் அறியப்பட்டது.
அதேபோல் பொற்பனைக்கோட்டையின் வடக்குச் சுவரின் மேற்புறத்தில் கொத்தளம் என்று சொல்லப்படும் சங்க காலச் சுவரின் அமைப்பும் இன்றுவரை உள்ளது. இந்தக் கொத்தளம் என்ற கோட்டை கட்டுமான அமைப்பு தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குணமடைந்த தொழுநோய்
பொற்பனைக்கோட்டை சுற்றளவு இரண்டரை கிலோ மீட்டர் ஆகும். கோட்டைக்குள் பழைய அரண்மனை ஒன்றும் இருந்திருக்கிறது. அதற்கான அடிச்சுவடுகளும் அங்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. அந்த அரண்மனையின் அருகில் உள்ளதுதான் நீராவி குளம் என்றும் பொய்கைக்குளம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக் கோட்டையை கட்டிய மன்னன், அதற்கு முன்னதாக காட்டில் வேட்டையாட வந்தபோது, குடிக்க நீர் கிடைக்காமல் அவதிப்பட்டதாகவும், அப்போது இக்குளத்தின் நீரை குடித்ததாகவும் இதனால் அவருக்கு இருந்த தொழுநோய் குணமானதாகவும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் செவிவழிச் செய்தியாகவும், கர்ண பரம்பரைக் கதையாகவும் இன்றளவும் இப்பகுதி மக்களால் சொல்லப்பட்டுவருகின்றது.
ஆடி மாதம் கிடாவெட்டு
பொற்பனைக்கோட்டை மேற்கு, கிழக்குத் திசைகளில் உள்ள முனீஸ்வரர் ஆலயங்களில் ஆடி முதல் தேதியிலிருந்து கடைசி வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து கிடாவெட்டு பூஜைகள் நடைபெறும். ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாகத் திருவிழா நடைபெறும். இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் வருவார்கள்.
இவ்விடத்தின் மையத்திலிருந்து சிறிது தூரத்தில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதங்கள் செய்யப்படும் இரும்பு உருக்கு ஆலையும், பாறையில் செதுக்கப்பட்ட குழியும் காணப்படுகிறது. இந்தக் குழியை சென்னாகுழி என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து ஆண்களும் இக்கோயிலுக்குப் பாத்தியப்பட்டவர்களாக இருந்து பூஜை முறைகளைச் செய்துவருகிறார்கள்.
தயாராகும் அகழ்வாராய்ச்சி
சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தினர், இவ்விடத்தில் ஆய்வுமேற்கொண்டு பானை, ஓடுகள், பழமையான கட்டுமானங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, இங்கு அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
தற்போது மதுரையில் கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வு போன்று, இந்தப் பொற்பனைக்கோட்டையிலும் அகழ்வாராய்ச்சி செய்து, இங்குள்ள வரலாற்றுச் சிறப்புகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு தொல்லியல் கழகத்தினர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதற்கு அகழ்வாராய்ச்சி செய்வதற்கான ஆணையையும் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
இன்னும் ஓரிரு வாரங்களில் அகழ்வாராய்ச்சிப் பணி தொடங்கவிருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறை அனுமதியோடு, பரிந்துரையோடு, தொல்லியல் துறை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பேராசிரியர், இளஇனியனின் வழிகாட்டுதலோடு இந்த அகழாய்வு ஒரு லட்சம் நிதி செலவில் ஒன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கவிருக்கிறது.
இந்த அகழாய்வில் கீழடி அளவிற்கு மிகப்பெரிய வரலாறுகள் புதைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஊரடங்கிலும் குழந்தைகளுக்கு சிற்றுண்டியுடன் டியூஷன்: கிராம இளைஞர்களின் கல்விச் சேவை