புதுக்கோட்டை மாவட்டத்தில் தினம்தோறும் 90 முதல் 100 நபர்கள் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் நேற்றைய (ஜூலை 29) நிலவரப்படி, 1,840க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
நாளுக்கு நாள் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துவருவதால், நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள புதிய கட்டடத்தில் 100 படுக்கைகள் வசதிகொண்ட கரோனா சித்தா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சித்தா முறையில் சிகிச்சை பெற விரும்பினால் இங்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த மருத்துவமனையில் நமது பாரம்பரிய வைத்தியம் முறையில், பல்வேறு மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.