அறந்தாங்கியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் சுபானா, கீர்த்தனா ஆகியோர் 400 கிராம் எடையுள்ள நானோ செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர். பருவநிலை மாற்றங்களைக் கண்டுபிடிக்கவும், வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைடு, காற்றின் ஈரப்பதம், காற்றின் நச்சுத்தன்மை ஆகியவற்றை அளவிடவும் இச்செயற்கைக்கோள் உதவும் என்றும், அதன்மூலம் விவசாயத்திற்குத் தேவையான பயன்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மாணவிகள் கூறுகின்றனர்.
இந்தச் செயற்கைக்கோள் மூலம், விவசாய நிலங்களை ஆராய்ந்து பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணித்து, எந்த நிலத்தில் என்ன மாதிரியான பயிர் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். விவசாயத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பணியைத் தொடங்கியதாகக் கூறும் இந்த மாணவிகள், அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளை நிச்சயம் உருவாக்குவோம் என நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.