புதுக்கோட்டை: காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓவியா. ஆறு வயதுடைய இவரது மகள் சீர்த்தி கண்ணம்மா, அருகில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.
தற்போது கரோனா தொற்றால் மோசமான சூழ்நிலையை சந்தித்துவருகிறோம். முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தளவு கரோனா நிவாரண நிதியை வழங்கிவருகின்றனர்.
சிறுமி நிவாரண நிதி வழங்கியபோது அந்த வரிசையில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சீர்த்தி கண்ணம்மா தனது மூன்று வயது முதல் உண்டியலில் சேமித்துவைத்திருந்த பணத்தை நேற்று (ஜூன் 24) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் நிவாரண நிதியாக வழங்கினார்.
அதில் 1,280 ரூபாய் இருந்தது. இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சிறுமியின் இந்தச் செயலை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.
இது குறித்து அந்தச் சிறுமியிடம் கேட்டபோது, “எனது அம்மா இந்த உண்டியலை வாங்கிக் கொடுத்து முடிந்த சில்லறைகளைத் தருவார். அதை நான் சிறிது சிறிதாகச் சேமித்துவந்தேன். அம்மா இந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார், நான் படிக்கும் அரசுப் பள்ளியில் தண்ணீர் வசதி கிடையாது அங்கு ஒரு அக்குவா வாட்டர் மெஷின் வைக்க வேண்டும், அதற்காக இந்தப் பணத்தைச் சேர்க்கிறேன்" என்று கூறினேன்.
நிவாரண நிதி வழங்கிய சிறுமி ஆனால் தற்போது கரோனா தொற்று ஊரடங்கு உத்தரவால் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனச் செய்தியில் பார்த்தேன். எனது உண்டியல் பணத்தை நிவாரண நிதியாக நான் கொடுக்க வேண்டும் என அம்மாவிடம் கூறினேன். அதனால் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வந்திருக்கிறோம். இதுபோல தங்களால் முடிந்த நிதி உதவியை அனைவரும் செய்தால் இந்தப் பாதிப்பிலிருந்து விடுபடலாம்” என அழகாக கூறினார்.
"மேலும் நான் சேர்த்துவைத்திருந்த காசு கொடுத்துவிட்டேன். எங்களது பள்ளிக்குத் தேவையான அக்வா வாட்டர் மெஷினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாமா நீங்கள் போட்டுத்தர வேண்டும்" என்று யதார்த்தமாகக் கோரிக்கைவைத்தார்.
சிறுமியின் தாயார் ஓவியாவிடம் கேட்டபோது, “என் மகள் அம்மா உண்டியல் நிரம்பிவிட்டது. இதை நிவாரண நிதியாகக் கொடுப்போமா என யதார்த்தமாகக் கேட்டபோது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது; மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அவளது ஆசையை கெடுக்க வேண்டாம் என உடனே ஒப்புக்கொண்டு இந்த நிதியை கொடுப்பதற்காக வந்தோம். பள்ளிக்கு அக்வா மெஷின் வாங்குவதற்கு வேறு உண்டியல் வாங்கி பணம் சேர்த்துக் கொள்கிறோம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லண்டன் செல்கிறாரா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!