புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள கும்மங்குளத்தைச் சேர்ந்த முருகேசன் - மீனா தம்பதியனரின் மகள் அபிநயா. பத்தாம் வகுப்பு மாணவியான இவர், அக்டோபர் 15ஆம் தேதி இரவு வீட்டினுள் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார்.
தகவல் அறிந்து வந்த ஆலங்குடி காவல்துறையினர், அபிநயாவின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். அபிநயாவின் மரணத்தை தற்கொலை என ஆலங்குடி காவல் துறையினர் முதலில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (அக்.16) உடற்கூராய்வு முடிந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அபிநயாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், உண்மையை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் மருத்துவக் கல்லூரி முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவியின் மரண வழக்கை சந்தேக மரணம் என பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சில மணி நேரங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:காவல் துறையினரின் நடவடிக்கையால் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்