புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுகப்பிரியா, ரேவதி முருகேசன் ஆகிய இருவருக்கும் கர்ப்ப கால ஸ்கேன் பரிசோதனையில், அவர்களது குழந்தைகளின் இடதுபுறத்தில் உதரவிதான குறைபாட்டினால் நுரையீரல் பகுதியில் குடல் ஏற்றம் இருப்பது கண்டறிப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவருக்கும், தலைமை மகப்பேறு மருத்துவர் அமுதா மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர் ஆகியோர் கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டின் தீவிரம் குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர்.
பின் குழந்தைகள் பிறந்தவுடன் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து இரண்டு குழந்தைகளும், பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
குழந்தைகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இடதுபுறம் உள்ள உதரவிதான குறைபாட்டினால் நுரையீரல் பகுதியில் குடல் ஏற்றம் ஏற்பட்டு நுரையீரல் சுருங்கியும், இதயம் வலதுபுறமாகத் தள்ளப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
குழந்தைகள் அறுவை சிகிச்சை வல்லுநர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மயக்கவியல் மருத்துவர்கள் அறிவரசன், சுபாஷினி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவால் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் இடதுபுற உதரவிதான குறைபாடு, குடல் ஏற்றம் சரிசெய்யப்பட்டது.