புதுக்கோட்டை வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு: 25 காளைகளை அடக்கி திருச்சி சிவா முதலிடம்..! புதுக்கோட்டை:தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும், அதிக வாடி வாசல்களைக் கொண்ட மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் திகழ்ந்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 6ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஜல்லிக்கட்டு போட்டியாகப் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வன்னியன் விடுதி கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர், மாயன் பெருமாள் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
காலை 8 மணிக்குத் தொடங்கிய இப்போட்டியைத் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். முன்னதாக வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
அதன் பின்னர் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 594 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் களம் இறக்கப்பட்டது. இதனைக் களத்திலிருந்த 234 மாடு பிடி வீரர்கள் சுழற்சி முறையில் களம் இறங்கி மாடுகளை அடக்கிய காட்சிகளும் அடக்க முயன்ற காட்சிகளும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மிக்ஸி, குக்கர், சில்வர் அண்டா உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் ரொக்க பரிசுகளும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உட்பட 47 பேர் காயமடைந்தனர். இதில் 21 பேர் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், திருச்சி மாவட்டம், பெரிய சூரியூரைச் சேர்ந்த சிவா என்பர் 25 மாடுகளைக் கட்டித் தழுவிய சிவா என்பர் முதல் இடம் பிடித்தார். அவருக்கு பேஷன் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அதோ போல் புதுக்கோட்டை மாவட்டம், காந்தி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவன் செல்வ பாரதி என்பவர் 22 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்குச் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.
அதோ போல் சிறந்த காளைக்கும் இரு சக்கர வாகனம் பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களில் பரிசு வழங்கப்படவில்லை. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் கலந்து கொள்ள டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போட்டி தாமதமாகத் தொடங்கப்பட்டதால் 594 காளைகள் மட்டுமே அவிழ்த்துவிடப்பட்டு போட்டி நிறைவு பெற்றது.
இதையும் படிங்க:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; சிறந்த வீரருக்கான கார் பரிசை வென்ற கருப்பாயூரணி கார்த்திக்!