புதுக்கோட்டை: அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் விஜயபாஸ்கர். இவர் தற்போதைய விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2016-21 காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து இருந்தனர். இந்நிலையில் டாக்டர் விஜயபாஸ்கர், அவர் மனைவி ரம்யா மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட அலுவலகங்கள் மற்றும் இலுப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல் குவாரி ஆகிய 50க்கும் மேற்பட்ட இடங்களில் 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் திடீர் சோதனை செய்தனர்.
இரண்டு நாட்களாக நடைபெற்ற அந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ்கள், தங்கம் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 17-10-2021ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்து 19 மாதங்கள் ஆகி உள்ள நிலையில், தற்போது புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி ரம்யா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
35.79 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்பொழுது அந்த குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி அ.தி.மு.க சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தபோது, “பழிவாங்கும் நடவடிக்கைகளை தி.மு.க அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. விஜயபாஸ்கர், சிறந்த அமைச்சராகச் செயல்பட்டவர். தற்போதும் விராலிமலை எம்.எல்.ஏ-வாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.