புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடுமியான்மலை வேளாண்மைக்கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, மகளிர் கல்லூரி விடுதிகள், மாணவர் கல்லூரி விடுதிகளில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாணவர் கல்லூரி விடுதியில் 200 படுக்கைகளும், மாணவியர் கல்லூரி விடுதியில் 250 படுக்கைகளும் என மொத்தம் 450 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு, கோவிட்-19 தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டால், ஆக்ஸிஜன் வசதி பொருத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை மேல் சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.
அந்த வரிசையில், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கோவிட்-19 சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சட்டம் நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையம் சுமார் 75 படுக்கை வசதிகள் கொண்டது. இம்மையத்தில் பாரம்பரிய உணவுகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளது. கோவிட்-19 நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்குவதற்காக ரூ.9 லட்சம் நிதி பெறப்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட எவ்வித குறைபாடுகள் இன்றி நோயாளிகளை கவனிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், " புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் -19 நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக் கூடிய நிறுவனங்கள் அனைத்தையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று நைட்ரஜன் உற்பத்தி செய்யக் கூடிய நிறுவனங்களை கண்டறிந்து அங்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.