தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே ஒரு போஸ்டர்தான்; மொத்த அரசு அலுவலர்களையும் அலறவிட்ட புதுக்கோட்டை குணா! - புதுக்கோட்டை அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டை : ஒரே ஒரு போஸ்டரால் மொத்த அரசு அலுவலர்களையும் அலறவைத்த புதுக்கோட்டை குணா, கிராம மக்களின் வற்புறுத்தலின்பேரில் தற்போது நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

புதுக்கோட்டை குணா
புதுக்கோட்டை குணா

By

Published : Mar 24, 2021, 3:04 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதி குனந்திரான்பட்டியைச் சேர்ந்தவர் குணா என்ற துரை குணா. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள குணா, சிறிய ஜெராக்ஸ் கடை ஒன்றை தன் பகுதியில் நடத்திவருகிறார். ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்துவந்தாலும், சமூக சேவைகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்.

தனது கிராமத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க அரசு அலுவலர்களுக்குச் சட்ட வகுப்பு எடுப்பதாக போஸ்டர் அடித்தது, மாவட்ட ஆட்சியருக்கு தோசைமாவு அவார்டு கொடுப்பதாக அறிவித்தது போன்ற வித்தியாசமான முறையில் தீர்வு காணும் இவரது நடவடிக்கைகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன.

ஒரே ஒரு போஸ்டர்தான்; மொத்த அரசு அலுவலர்களையும் அலறவிட்ட புதுக்கோட்டை குணா!

இதன் காரணமாக அரசு அலுவலர்களும் பிரச்சினைகள் உடனடியாகச் சரிசெய்யப்படும் என உறுதி அளித்தனர். தற்போது கிராம மக்களின் வற்புறுத்தலின்பேரிலும், தான் செய்துவரும் சமூக சேவையை ஏன் அரசியல் அதிகாரத்திலிருந்து செயல்படுத்தக் கூடாதென்ற யோசனையின் பேரிலும் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் துரை குணா.

புதுக்கோட்டைத் தொகுதியில் பேனா முனை சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தேர்தலுக்காக லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து செலவு செய்துவரும் வேளையில், எந்த ஒரு பொருளாதார பின்புலமும் இல்லாத குணா எப்படி தேர்தலில் வெற்றிபெறுவார் என அவரிடமே கேள்வி எழுப்பினோம்.

இது குறித்து அவர் பேசுகையில், “சிறிய குடிசை வீடும், எனது மனைவியின் நான்கு கிராம் தங்கத் தாலி மட்டுமே எனது சொத்து. தற்போதுள்ள அலுவலர்களின் கட்டமைப்புகளைச் சரிசெய்ய வேண்டும். அரசியல் என்றால் சேவைசெய்வது என்பதை மக்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்றுதான் நான் தேர்தலில் போட்டியிட நினைத்தேன்.

ஆட்சியில் அமர்ந்த ஐந்தாண்டுகள் மக்களைச் சந்திக்காமல், வாக்கு கேட்கும் நேரத்தில் நாற்று நடுவது, கும்மியடிப்பது, துணி துவைத்துக் கொடுப்பது என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் செயல்.

ஆசை வார்த்தைகள் கூறி தேர்தலின்போது மட்டும் மக்களைச் சந்திப்பது சரி கிடையாது. தேர்தலில் போட்டியிட கோடிக்கணக்கில் பணம்தான் தேவை என்பதில்லை. மக்கள் நல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தத்தான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

நான் வசிக்கும் பகுதியில் உள்ள பிரச்சினைகளை முதல் ஆளாக நான் தட்டிக் கேட்க வந்த காரணத்தால்தான், என் கிராம மக்கள் என்னைத் தேர்தலில் நிற்குமாறு வலியுறுத்துகின்றனர். மக்கள் குறை களையப்பட வேண்டும் என்ற எண்ணமே முக்கியம். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்கான நலன்களைச் செய்ய முன்வர வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:'மதுர பாஷைதான் இந்த விருதுக்கு காரணமே' - குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்

ABOUT THE AUTHOR

...view details