புதுக்கோட்டை: நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைபட்டியில் சிஐஎஸ்ஃப்(Central Industrial Security Force) வீரர்களில் துப்பாக்கிப் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் வழக்கம் போல் வீரர்கள் இன்று(டிச.30) பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
அப்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி(11) என்ற சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளனர்.
சிறுவனின் தலையின் இடது புறம் பாய்ந்த குண்டு மூளையின் ஓரம் சிக்கி உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதற்கான மருத்துவ குழுவினர் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து புகழேந்தியின் உறவினர்கள் நார்த்தமலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- திருச்சி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,துப்பாக்கிப் பயிற்சி மையம் செயல்பட தடை விதித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : சிறுவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு!