புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ராஜேந்திரன் என்பவர் ஜூன் 26ஆம் தேதி மயக்கமடைந்து கீழே விழுந்ததனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் கொண்டு பரிசோதனை செய்ததில் மூளையில் வலது மற்றும் இடது புறத்தில் முன்பக்கம் பக்கவாட்டு பகுதியில், மேல் பகுதியில் ரத்தக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு மூன்று நாள்கள் சிகிச்சையளித்த நிலையிலும் உடல்நிலையில் முன்னேறாத காரணத்தினால், ஜூன் 30ஆம் தேதி மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஸ்டாலின் தலைமையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவர் சாய்பிரபா சரவணன் தலைமையில் மயக்க மருந்துகள் நோயாளிக்கு அளித்தனர். அவருடைய தலையில் இரு பக்கங்களிலும் இரண்டு துவாரங்கள் வீதம் நான்கு துவாரங்கள் போடப்பட்டு, அது வழியாக அந்த ரத்தக் கட்டி அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரண்டு நாள்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில், விலையுயர்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் அவருக்கு செலுத்தப்பட்டன. சிறிது சிறிதாக குணமடைந்த தேறிய ராஜேந்திரன் இன்று நல்ல நிலையில் வீடு திரும்பினார்.