நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ‘ஐயோ... ஆராய்ச்சியாளர்களே இதுக்கு யாராவது மருந்து கண்டுபிடிங்களேன்’ என உலகம் முழுக்க மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு முடிவே கிடையாதா! என்ற எண்ணம் மக்களிடம் நாளுக்கு நாள் மேலோங்கிக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், நோயாளியையும் மருத்துவரையும் காக்க மருத்துவரே ஒரு கருவியை உருவாக்கியுள்ளார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் உண்மை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பெரியசாமிதான் அந்த வடிவமைப்பாளர். இவரை சந்திப்பதற்காக ஆலங்குடி மருத்துவமனைக்கு ஈடிவி பாரத் சார்பில் விரைந்தோம். ஊருக்குள் நுழைந்ததுமே அவரை விசாரிக்கத் தொடங்கியதுதான் தாமதம், ‘ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து தற்போது அன்பான மருத்துவராக எவ்வித கர்வமும் இல்லாமல் வைத்தியம் பார்க்கிறார்’ என அவருக்கு ஒட்டுமொத்த ஊருமே புகழாரம் சூட்டினர்.
கொஞ்சம் தாமதிக்காமல் அவரை சந்தித்தோம். தான் கடந்து வந்த பாதையை ஒவ்வொன்றாக விளக்கினார் மருத்துவர் பெரியசாமி. கரோனாவுக்காக அவர் வடிவமைத்த இந்த கருவி தனது 6ஆவது வடிவமைப்பு எனவும், இதற்கு தற்போது காப்புரிமைக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறியதும் சற்றே ஆடித்தான் போனோம்.
”புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கும் கந்தர்வகோட்டை கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில்தான் பிறந்தேன். எனது திறமையை மட்டும் நம்பிதான் மருத்துவர் ஆனேன். அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில்தான் எனது லட்சத்தை நோக்கி பயணித்தேன். முதலில் நம்மால் மருத்துவராக முடியுமா என்ற பயம் இருந்தது. ஆனால் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவராகிவிட்டேன். அதோடு நான் நின்றுவிடவில்லை” என்றார் மருத்துவர் பெரியசாமி.
மருத்துவரான நீங்கள் புதிய கருவிகளை கவனம் செலுத்துவது எப்படி? வியக்க வைக்கிறதே எனக் கேட்டதும் சற்றும் யோசிக்காமல் பதில் பேசத் தொடங்கினார், மருத்துவர் பெரியசாமி. அவர் கூறுகையில், “நான் 25 ஆண்டுகளாக மருத்துவ துறையில் இருக்கிறேன். அதில், வடிவமைப்புகளின் மீது எனக்கிருந்த ஆர்வம் குறையவேயில்லை.
முதன்முதலில் ஜிப்மர் மருத்துவமனையில் பயிற்சியின் போது எனது முதல் வடிவமைப்பான பெரிஸ் பிரீதிங் சர்க்யூட்டை( Peri's breathing cercuit) வடிவமைத்து அறிமுகப்படுத்தினேன். அடுத்தடுத்து பெரிஸ் மௌத் கேஃக் ஹொல்டர் (Peri's mouth gag holder), பெரிஸ் லிம்ப் ஹோல்டர் ( Peri's limb holder), பெரிஸ் ஹீமோஸ்டாட்டிக் நேசல் லூப் ( Peri's hemostatic nacal loop), பெரிஸ் லாப்ராஸ்கோப்பி ட்ரோக்கர் கார்னுலா (peri's laparoscope trocar carnla), மற்றும் தற்போது பெரிஸ் லேரிங்கோஸ்கோப் ப்ளேடு ( Peri's laryngoscope blade) ஆகியவற்றை வடிவமைத்துள்ளேன். இதில் மூன்று கருவிகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன” என்றார்.