புதுக்கோட்டை: பொன்னமராவதி பகுதியில் அமைந்துள்ள காரையூர் ஊராட்சி மன்றத் தலைவராக முகமது இக்பால் என்பவர் உள்ளார். இதே ஊரைச் சேர்ந்த திமுக நிர்வாகியான பாரதி என்ற பாரதிதாசன், ஊராட்சி மன்றத் தலைவர் முகமது இக்பாலிடம் நகை மற்றும் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், இதன் காரணமாக ஊராட்சி மன்றத் தலைவர் முகமது இக்பாலுக்கும், பாரதிதாசனுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பாரதிதாசனிடம் கொடுத்த நகை மற்றும் பணத்தை முகமது இக்பால் சில தினங்களுக்கு முன்பு திரும்பக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாரதிதாசன், முகமது இக்பாலை தகாத முறையில் திட்டியதோடு, மருதம் மக்கள் கட்சியின் நிறுவனரான பழனிச்சாமி உள்பட பிச்சை முத்து, ஆனந்த், கண்ணன், சரவணன் ஆகிய ஆறு பேரும் சேர்ந்து முகமது இக்பாலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் காரையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தைத் தாக்கி, அங்கிருந்த கணினி, நாற்காலி மற்றும் மேஜைகள் ஆகியவற்றை உடைத்ததோடு, அங்கு பணியாற்றிய பெண்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, ஊராட்சி மன்றத் தலைவர் முகமது இக்பால் மீது பிசிஆர் வழக்குத் தொடுக்கப்படும் என்றும் பாரதிதாசன் மிரட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து சம்பவம் குறித்து காரையூர் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காரையூர் காவல் துறையினர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரிடம் மட்டும் விசாரணை நடத்தி விட்டு, வழக்குப் பதியாமலும் சம்மந்தப்பட்ட மற்ற யாரையும் விசாரிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.