புதுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர் ஒருவர் தமது பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்துவதற்காக பாடல் ஒன்றிற்கு மாணவிகளோடு இணைந்து நடனமாடிய காட்சியை மாவட்ட ஆட்சியர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி காண்போரை கவர்ந்து வருகிறது.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ராஜகோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றுபவர், ரேவதி. இந்நிலையில் நடந்து முடிந்த பள்ளிகளுக்கு இடையேயான கலைத் திருவிழாவின்போது அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளும் கலைத் திருவிழாவில் பங்கேற்க நடனப்பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
அப்போது அப்பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்தும் நோக்குடன் பாடல் ஒன்றுக்கு அப்பள்ளியின் தமிழ் ஆசிரியை ரேவதி நடனமாடிய காட்சிகளும், அவருடன் சேர்ந்து அப்பள்ளி மாணவிகளும் நடனமாடிய காட்சிகளும் காண்போரின் கவனத்தை ஈர்த்தது. கலைத் திருவிழாவில் பங்கேற்க சென்ற அரசுப் பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்துவதற்காக ஆசிரியர் ரேவதி நடனமாடிய வீடியோவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று (பிப்.3) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.