தமிழ்நாடு முதலமைச்சர் பருவமழையின் போது கிடைக்கப்பெறும் மழைநீரை முழுவதுமாக சேமிக்கும் வகையில் குடிமராமத்து பணித்திட்டம், ஏரி, கால்வாய்கள், வரத்துவாய்க்கால்களை தூர்வாருதல் என முன் எப்போதும் இல்லாத வகையில் நீர்மேலாண்மையில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றார்.அதே போன்று கடந்தகால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்பேரில், புதுக்கோட்டை நகராட்சியில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்ஷா இன்று ஆய்வு செய்தார்
இதுகுறித்து அவர் கூறுகையில்,"புதுக்கோட்டை நகராட்சியை பொறுத்தவரை 42 வார்டுகளில் 499 வீதிகள் மற்றும் 36,030 வீடுகள் என 1,43,748 நபர்களை உள்ளடக்கிய மக்கள் தொகையை கொண்டது.வடகிழக்கு பருவமழையின் போது டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள்; பரவாமல் தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 400 பணியாளர்களை கொண்டு வாரம் முழுவதும் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் லார்வா கொசுப்புழு உருவாகாத வகையில் மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.நல்ல தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பாக அமைந்துள்ளது என்பதால் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தங்கள் வீட்டில் பிரிட்ஜ் பின்புறம் நீர் தேங்காத வகையில் அவ்வப்போது அப்புறபடுத்தவும், டயர்கள், தேங்காய் சிரட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவைகள் வீடுகளை சுற்றி இல்லாமல் அப்புறப்படுத்திட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அவர் கூறுகையில், "புதுக்கோட்டை நகராட்சி பகுதிளில் குப்பைகள், கழிவுநீர் உள்ளிட்டவைகளை தேங்காத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்திடவும், இப்பணிகளை கண்காணித்திட தனி அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இத்தகைய தருணத்தில் காய்ச்சியை நீரை பருகுதல், தங்கள் சுற்றுச்சுழலை தூய்மையாக வைத்திருப்பது உள்ளிட்ட அரசு கூறும் வழிமுறைகளை தவறாது கடைபிடித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.