புதுக்கோட்டையில் உள்ள அம்மா உணவகம், தனியார் பல்பொருள் அங்காடி, தனியார் விடுதிகள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புதுக்கோட்டை முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்கு கைகழுவுவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் கரோனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். பல்பொருள் அங்காடிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் பணம் செலுத்தும் இடத்துடன் நிறுத்தப்பட்டு தங்களுக்கு தேவையான பொருள்களை தாங்களே தேர்வு செய்யாமல், அதற்குரிய பட்டியலை கொடுத்து பொருள்களை பெற்றுச் செல்லும் முறையினை பின்பற்றுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கரோனா குறித்த சந்தேகங்களைக் கேட்டு தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர், பொதுப்பணி அலுவலர் ஆகியோரைக் கொண்டு 24 மணி நேரமும் இயங்கக் கூடிய அவசர கால கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கட்டுப்பாட்டு அறையினை 04322-222207 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கரோனா குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களைக் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் வரும் 31ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் முகக்கவசம், கிருமிநாசினி, கைகழுவும் திரவம் போன்றவை சரியான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பொருள்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.