சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் புதுக்கோட்டை: வெட்டன் விடுதி, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏழு நபர்கள் தங்களுடைய பெற்றோருடன் நேற்று (மே 4) புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறுகையில், "தாங்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டம், வெட்டன் விடுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், படித்து முடித்து விட்டு இங்கு நல்ல வேலை கிடைக்காததால் தங்களின் குடும்ப வறுமையை போக்க சிங்கப்பூர் நாட்டிற்கு வேலைக்கு செல்ல முடுடிவு செய்ததாக கூறினர்.
இதற்காக நண்பர் ஒருவர் மூலம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பர்மா காலனியில் வசிக்கும் சுரேஷ் என்பவரை அனுகியுள்ளனர். அப்போது, அவர் சிங்கப்பூரில் நல்ல வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தங்களிடம் தலா 2 லட்சம் ரூபாய் வரையில் பணம் வசூல் செய்து விட்டு ஐபியையும் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
அவர் கொடுத்த ஐபி போலி என்பது பின்பு தான் தெரியவந்தது. இதே போல புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரிடம் 45 லட்ச ரூபாய் வரையில் சுரேஷ் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் சொந்த நாட்டில் வாழ வழி இல்லாமல் கடன் வாங்கியும், நகை நட்டுகளை அடகு வைக்கும் சுரேஷிடம் பணத்தை கொடுத்து விட்டு தாங்கள் தற்போது கடன் கட்ட கூட வழியின்றி தவிப்பதாக கூறினர்.
இந்த மோசடி குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால் தற்போது புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுரேஷிடம் தாங்கள் இழந்த தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும், தங்களிடம் ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட சுரேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது!