தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா.! - கோயில் திருவிழா

புதுக்கோட்டை அருகே பிரசித்திபெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா மிக விமரிசையாக நடைபெற்றது.

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

By

Published : Feb 27, 2023, 2:58 PM IST

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை:திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று (பிப். 26) பூச்சொரிதல் விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவப்பூர் திருவிழாவில் கலந்துகொண்டு அம்பாளை தரிசிக்க புதுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்தனர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு ஆங்காங்கே தண்ணீர் பந்தலும், அன்னதானமும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் கரகாட்டம், பாட்டுக்கச்சேரி, பட்டிமன்றம், நாடகம் எனத் திருவிழா களைகட்டியது. பின்னர் இரவு பல்வேறு பகுதியிலிருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். இதில் பக்தர்கள் அம்மன் வேடமணிந்தும், ஆடியும், முளைப்பாரி எடுத்து வந்தது பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த பூச்சொரிதல் விழாவில் பொதுமக்கள் உற்சாகமாக கலந்துகொண்டு, பக்தி பரவசமடைந்தனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பூக்கள் அம்பாளுக்கு முன்பாக கொடிமரத்துக்கு அருகில் குவிக்கப்பட்டது. பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்படும் பூக்களை இன்று காலை பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த பூக்கள் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இதையும் படிங்க: தமிழ் வளர்ச்சிக்கு கூடுதல் பல்கலைக்கழகங்கள் வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details