புதுக்கோட்டை நகராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். குறிப்பாக மேற்பார்வையாளர், கிளார்க், மேஸ்திரி, ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் நகராட்சி நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று (நவ. 06) இரவு நகராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஊதியம் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா அறையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நகராட்சி சார்பில் விரைவில் ஊதியம் வழங்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க:கடற்கரை கிராமத்தில் கரை ஒதுங்கிய 56 கிலோ எடையுள்ள கஞ்சா பார்சல்கள் பறிமுதல்