புதுக்கோட்டை:திருமயம் தாலுகாவிற்கு உட்பட்டது குழிபிறை ஊராட்சி. இந்த குழிபிறை ஊராட்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவராக அழகப்பன் என்பவர் இருந்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தான் சார்ந்த குழிபிறை ஊராட்சியை சிறந்த ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பதவிக்கு வந்ததாக கூறுகிறார்.
இதில், மக்களின் தேவையாக முதலில் கையில் எடுத்த விஷயம், குடிநீர். பொதுவாக பொதுமக்களின் அடிப்படைத் தேவையாக விளங்கும் குடிநீருக்காக குழிபிறை ஊராட்சியில் 2 லட்சத்து 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 9 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளது. இதில் 6 தொட்டிகள் நல்ல முறையில் இயங்கி வந்துள்ளது.
மற்ற மூன்று தொட்டிகள் 1970ஆம் ஆண்டு, அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள். எனவே, அந்த 3 தொட்டிகளையும் பொதுப்பணித்துறை ஒப்புதலோடு சீரமைத்து, 9 தொட்டிகளையும் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அன்றாடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீரை வழங்கி வருகிறார்.
இதில் அடுத்த கட்டமாக, கடந்த ஆண்டு நம் நாட்டில் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் அழகப்பன் கலந்து கொண்டார். அப்போது, அங்கு உலக ஒற்றுமை மற்றும் தேசப்பற்றை பொதுமக்களிடம் வளர்க்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அப்போது ஏற்பட்ட சிந்தனைதான் மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக் கொடியை வரைவது என அழகப்பன் கூறுகிறார். இந்த தேசியக்கொடி ஓவியம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், தேசப்பற்று குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், குழிபிறை கிராமத்திற்குள் நுழையும்போது நம்மை வரவேற்கும் விதமாக உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள தேசியக்கொடி ஓவியம், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை கவர்கிறது. அந்த ஓவியத்தை பொதுமக்கள் புகைப்படம் எடுப்பதும், செல்பி எடுப்பதும், அதை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி, பொதுமக்கள் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக 3 நாட்கள் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், குழிபிறை ஊராட்சியில் தேசியக்கொடி காலம் முழுவதும் ஓவியத்தால் பொதுமக்கள் மனதில் வரையப்பட்டுள்ளது.