புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி உடல் நலக்குறைவால் காலமானார் புதுக்கோட்டை: புதுக்கோட்டைசமஸ்தானத்தின் கடைசி மன்னர் ஸ்ரீ ராஜா ராஜகோபால தொண்டைமான், விஜயரகுநாத தொண்டைமான் ஆகியோரின் சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமானின் மனைவியும், ராஜகோபால் தொண்டைமான், விஜயகுமார் தொண்டைமான் ஆகியோரின் தாயாருமான ராணி ரமாதேவி தொண்டைமான்(84) அம்மையார், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று மதியம் ராணி ரமாதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது ராணி ரமாதேவியின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராணி ரமாதேவியின் உடல் புதுக்கோட்டையை அடுத்த இச்சடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ஆகியோர் ராணி ரமாதேவி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ராணி ரமாதேவி உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஆளுநர் ஆர்.என்.ரவியே வெளியேறு" - மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முழக்கம்..!