புதுக்கோட்டை: மாவட்டத்தில் நிவர் புயலை சமாளிக்க அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
தமிழக வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரைக்கால் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசுத் துறை அலுவலர்களோடு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மீட்புப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மற்றும் தணிக்கை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் உமா, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.
பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322-222207 என்ற தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் 60 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. இது தவிர ஒவ்வொரு கிராமத்திலும் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.