16 வருடங்களாக மாறாத தந்தையின் பாசம் புதுக்கோட்டை:தமிழகத்தில் குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாளாக, பண்டிகைகள் இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழர்கள் தங்கள் இல்லத் திருமணங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் ஆகிய சுப நிகழ்வுகளை தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
அந்த வகையில், பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படுகிறது. இந்த நாளில், தமிழர்கள் தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், தானியங்கள், அரிசி ஆகியவற்றைக் கொண்டு சமையல் செய்து, பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுவர். மேலும், இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக, தங்களது வீடுகளில் பிறந்த திருமணமான பெண் பிள்ளைகளுக்கு, இந்த தினத்தில் பொங்கல் சீர் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர், தன் மகளுக்கு கடந்த 16 வருடங்களாக சைக்கிளில் பயணம் செய்து, பொங்கல் சீர் வழங்கி வருவது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் நால்ரோடு அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், செல்லத்துரை (80). இவரது மனைவி அமிர்தவள்ளி. இவர்களுக்கு சுந்தராம்பாள் என்ற மகளும், முருகேசன் என்ற மகனும் உள்ளனர். தந்தை செல்லத்துரை தினந்தோறும் கீரை, காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்று, வடக்கு கொத்தக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து, அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.
இதையும் படிங்க: தென்காசியில் தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட 'சமத்துவ பொங்கல்'..! திருப்பலியும் பொங்கலும் வைத்து வழிபாடு
செல்லதுரை மகள் சுந்தராம்பாள், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பம்பட்டி கிராமத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். அவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்த தந்தை செல்லதுரை, அன்றைய தினம் முதல் இன்று வரை தொடர்ச்சியாக 16 ஆண்டு காலமாக பாரம்பரியமும், கலாச்சாரமும் மாறாமல், மகள் மீது கொண்ட பாசத்தால், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மகளுக்கு பொங்கல் சீர் வழங்கி வருகிறார்.
குறிப்பாக, செல்லதுரைக்கு 80 வயதாகியுள்ள நிலையிலும் தேங்காய், பழம், மஞ்சள் கொத்து, வேட்டி, துண்டு, பொங்கல் பூ, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் சீர் பொருட்களை, தனது சைக்கிளில் வைத்துக் கொண்டு, அதனோடு ஐந்து கரும்புகளையும் கையில் பிடிக்காமல் தலையில் வைத்து சுமந்தபடி, சைக்கிளை ஓட்டிச் சென்று, தன் மகள் சுந்தராம்பாளுக்கு கொடுத்து வருகிறார்.
வம்பன் நால்ரோடு பகுதியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் தள்ளி உள்ள நம்பம்பட்டி வரை சைக்கிளிலேயே அவர் இந்த பொங்கல் சீரை கொண்டு செல்கிறார். இவ்வாறு செல்லும் வழியில், சாலை நெடுகிலும் உள்ள மக்கள் செல்லதுரையை கண்டுவியந்து வருவதோடு, கைகளைக் காட்டி பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் இதனை பொதுமக்கள் தங்கள் செல் போன்களில் புகைப்படங்களாக எடுத்தும் வியந்தனர்.
இதையும் படிங்க: சேலத்தில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்!