தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யூரியா தட்டுப்பாட்டை அரசு போக்க வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள் - புதுக்கோட்டை யூரியா தட்டுப்பாடு

புதுக்கோட்டை: மாவட்டத்தில் நிலவிவரும் யூரியா தட்டுப்பாட்டைப் போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

pudukkottai farmers urea shortage

By

Published : Nov 11, 2019, 11:56 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளாமல் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பிருந்தே மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் நம்பிக்கையோடு சாகுபடி பணிகளைத் தொடங்கினார். தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் அதற்குத் தேவையான இடு உரமான யூரியா கிடைக்காமல் விரக்தியில் உள்ளனர்.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருந்த யூரியா உரம் விற்றுத் தீர்ந்த நிலையில், தனியார் உரக்கடைகளில் 400 முதல் 450 ரூபாய் வரை கூடுதல் விலை கொடுத்து யூரியா உரத்தை வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பல தனியார் உரக்கடைகளிலும் இருப்பு காலியானது, விவசாயிகளை மேலும் கவலை அடையச் செய்துள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளில் இன்று யூரியா விற்பனை செய்யப்படுவதாக தகவல் அறிந்த விவசாயிகள் அந்த கடைகளில் குவிந்தனர்.

உரக்கடையில் குவிந்த விவாசியகள்

இதைப்பயன்படுத்தி, சில உரக்கடை நிர்வாகத்தினர் ஒரு யூரியா மூட்டை (270 ரூபாய்) வாங்க வேண்டுமானால் சத்து குருணை மூட்டை (360 ரூபாய்) வாங்கக் கட்டாயப்படுத்தினர். ஆத்திரமடைந்த விவசாயிகள் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் சத்து குருணை வாங்கிய விவசாயிகளுக்கு மட்டுமே யூரியா உரம் மூட்டை வழங்கப்பட்டது.

உரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிக அளவில் குவிந்ததை அறிந்து அந்த கடை ஊழியர்கள் கதவை மூடிவிட்டுச் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உரம் வாங்க வந்திருந்த விவசாயிகள் கூறுகையில், 'புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வருவதால் நம்பிக்கையோடு சாகுபடி பணிகளை மேற்கொண்டு பயிர்களும் வளர்ந்து தற்போது நல்ல நிலையில் உள்ளன.

ஆனால், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மாவட்டத்தில் யூரியா உரம் கிடைக்காததால் இந்த காலகட்டத்தில் பயிர்களுக்கு உரம் போட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் உரம் கிடைக்கவில்லை. தனியார் கடைக்கு வந்தால் அவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். தற்போது அதையும் தாண்டி சத்து குருணை வாங்கினால் மட்டுமே யூரியா உர மூட்டை வழங்குவோம் என்று கூறுவதால் பல விவசாயிகள் உரம் வாங்க முடியாமல் தவித்து போயுள்ளனர்" என வேதனை தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு யூரியா தட்டுப்பாட்டைப் போக்க வழிவகை செய்ய வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மூத்தக்குடிக்கு சான்றாய் விளங்கும் கீழடி!

ABOUT THE AUTHOR

...view details