தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...! - தனி நாணயம்

சுதந்திர இந்தியாவில் தங்களுக்கெனத் தனி நாணயம் வைத்துக் கொண்டு சமஸ்தான அந்தஸ்துடன் நீடித்த அரசுகளில் புதுக்கோட்டையும் ஒன்று. இந்தியா விடுதலையடைந்து 7 மாதங்கள் கழித்து இந்திய அரசுடன் தன்னை இணைத்துக் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானம், தன் ஆதி வரலாற்றைப் பழைய கற்காலத்திலிருந்து தொடங்குகிறது. சித்தன்னவாசல் குகை, சமணர் படுக்கை, பல்லவர்களிலிருந்து நாயக்கர்கள் வரை தன் கலைத் திறமையைப் பதிந்து வைத்திருக்கும் குடுமியான்மலை கோயில், சோழர்களின் கட்டடக் கலைக்கு முன்னோடியான கொடும்பாளூர் கோயில், திருமயம் கோட்டை, தொண்டைமான் மன்னர்களது புதிய கோட்டை என, வரலாற்று மாற்றங்களின் எச்சங்களைத் தாங்கி நிற்கிறது இம்மாவட்டம். மன்னர்கள் காலத்தில் நீர்நிலைகளால் செழித்திருந்த நிலங்கள் இன்று வானம் பார்த்தப் பூமியாக இருக்கின்றன. விவசாயம் பிரதானத் தொழில்; மாவட்டத்தின் தென்கிழக்கு கடலால் சூழப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடிப்பும் நடக்கிறது. கடந்த 1974 ஆம் ஆண்டு தஞ்சை, திருச்சியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமான புதுக்கோட்டைக்கு மேற்கு, வடமேற்கில் திருச்சி, தென்மேற்கில் இராமநாதபுரம், சிவகங்கை, வட கிழக்கில் தஞ்சை மாவட்டங்களும், தென்கிழக்கில் பாக் நீரிணையும் எல்லைகளாக அமைந்துள்ளன.

pudukkottai district watch
புதுக்கோட்டை தொகுதிகள் வலம்

By

Published : Mar 28, 2021, 9:53 AM IST

வாசல்:

பழைய கற்கால எச்சங்கள் முதல் அரசர்கள் காலத்து அடையாளங்கள் வரைத் தன்னுள் கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வக்கோட்டை(தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

தொகுதிகள் உலா:

கந்தர்வக்கோட்டை(தனி): தொகுதிகள் மறுசீரமைப்பிற்குப் பின்னர் உருவான கந்தர்வக்கோட்டை தொகுதி மாவட்டத்தின் தனித் தொகுதியும்கூட. கிராமங்கள் அதிகம் கொண்ட தொகுதியில் விவசாயமே பிரதானம். இந்தத் தொகுதி முந்திரி விளைச்சலுக்குச் சிறப்பு பெற்றது.

இங்கு அரசு சார்பில் ஒரு முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தொகுதியில் விவசாயம் தவிர வேலைவாய்ப்புக்கு வேறு வழி இல்லை. இதனால் தொழிற்சாலைகள் தொடங்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்; குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்; காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் வாய்க்கால் அமைத்து கந்தர்வக்கோட்டைக்கு காவிரி நீர் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்; ஊராட்சியாக உள்ள கந்தர்வக்கோட்டையை பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என்பன தொகுதியின் கோரிக்கைகள்.

விராலிமலை:மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதி. சித்தன்னவாசல் குகை, சமணர் படுகை, கொடும்பாளூர் கோயில், குடுமியான்மலை, விராலிமலை முருகன் கோயில் போன்றவை தொகுதியின் அடையாளங்கள். அமைச்சரின் தொகுதி என்ற அந்தஸ்த்தில் சில பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

தொகுதியில் அரசுக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் தேவைகளில் ஒன்று குவாரிகள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் உள்ளூர் மக்களுக்கு அதில் வேலை கிடைப்பதில்லை. நார்த்தாமலை பகுதியில் மலைப்பாம்புகள் மறுவாழ்வு மையம். விராலிமலையில் மயில்கள் சரணாலயம் பாதுகாக்கப்பட வேண்டும். சித்தன்னவாசல் சுற்றலாத்தலத்தை மேம்படுத்த வேண்டும் என்பன தொகுதியின் பிற கோரிக்கைகள்.

புதுக்கோட்டை: தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊர். மாநிலத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் புதுக்கோட்டையில் தான் இருக்கிறது. தொண்டைமான் மன்னர் காலத்து அரண்மனை தற்போது மாவட்ட ஆட்சியரகமாக செயல்படுகிறது.

விவசாயமே பிரதான தொழில். அதனைத் தவிர பெரிய தொழில் வாய்ப்புகள் இல்லை. இந்தத் தொகுதியில் அடிப்படை வசதிகள் பெரிய அளவில் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நகராட்சி பகுதியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் மக்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இந்தத் திட்டத்தின் தோல்வியால் கழிவுநீர் சாலைகளில் ஓடுகின்றன. இங்குள்ள அருங்காட்சியகத்திற்குப் பெரிய கட்டிடம் இல்லை. அதே போல மன்னர் காலத்து பாரம்பரிய கட்டிடங்கள் அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டு பாழ்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களை நகருக்கு வெளியே புதிதாகக் கட்டி, பாரம்பரியம் மிக்க பழைய கட்டிடங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொகுதிக்குள் உண்டு.

திருமயம்: 108 வைணவத் தலங்களுள் ஒன்று திருமயம். மலையை குடைந்து, சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பல்லவர்கள் கட்டிய குடைவரைக் கோயில், சமய பேதமின்றி அனைத்து மக்களும் வழிபடும் காட்டுபாவா பள்ளிவாசல், ஊமைத்துரை கோட்டை ஆகியவை தொகுதிக்கான அடையாளங்கள்.

தியாகி சத்தியமூர்த்தி பிறந்த ஊர். விவசாயமே பிரதானமான தொழில்; வானம் பார்த்த பூமி. கொள்ளிடம் காவிரி நீரைக் கொண்டுவர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. தியாகி சத்தியமூர்த்திக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். அவர் பிறந்த வீட்டை நினைவு இல்லமாக்க வேண்டும், திருமயத்தில் அரசு கல்லூரி கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொகுதியில் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

ஆலங்குடி: விவசாயம் செழித்திருக்கும் தொகுதி. மழை நீரையும், நிலத்தடி நீரையும் நம்பி விவசாயம் நடைபெறுகிறது. ஆசியாவிலேயே மிகவும் உயரமான குளமங்கலம் பெருங்கரையாடி மீண்ட அய்யனார் கோயில் குதிரை சிலை தொகுதிக்கான அடையாளங்களில் ஒன்று. நெல், வாழை, கடலை, மல்லி, சம்மங்கி போன்ற பூக்கள், இங்கு மா, பலாவும், மிளகும் விளைகின்றன. விளைச்சல் அதிகம் இருந்தாலும் விலையில்லாததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால், அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, கோரிக்கையாகவேத் தொடர்கிறது. பூக்கள் அதிகம் விளைவதால் தொகுதியில் வாசனை திரவியத் தொழிற்சாலை தொடங்கப்பட வேண்டும் என்றும், தொகுதிவாசிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அறந்தாங்கி: புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக நகராட்சி பகுதியாக இருக்கும் அறந்தாங்கியைக் கொண்டுள்ளது தொகுதி. மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஆத்ம நாத சுவாமி கோயில், ஆவுடையார் கோயில், கோட்டைப்பட்டினத்தில் இருக்கும் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்ஹாவும் தொகுதியின் ஆன்மிக அடையாளங்கள்.

இந்தத் தொகுதிக்குட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் விசைப்படகுகள் மூலமாகவும், புதுப்பட்டினம் உள்ளிட்ட 32 கிராமங்களில் நாட்டுப்படகு மூலமாகவும் மீன்பிடிப்பு நடந்து வருகிறது. மீன் ஏற்றுமதி மூலமாக அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது. பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

பேருந்து நிலையம் விரிவாக்கப்படாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நேரடி நெல்கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்; நவீன அரிசி ஆலை அமைக்கப்பட வேண்டும் என்பன போன்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மீனவ கிராமங்களில் நாட்டுபடகு விசைப்படகுப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை தீர்க்கப்படவில்லை.

மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்களில் புதுக்கோட்டை மீனவர்களும் அதிகம். மீனவர்களுக்கான இந்த பாதுகாப்பு பிரச்னையில் மத்திய,மாநில அரசுகள் தீவிரம் காட்டவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

களநிலவரம்:வரலாற்றுச் சுற்றுலாத்தலங்கள் பலவற்றைக் கொண்ட மாவட்டம், முதல் பெண் மருத்துவர், காமராஜரின் அரசியல் ஆசான் தியாகி சத்தியமூர்த்தி, கம்யூனிஸ்ட் ஜீவா, தமிழில் முதல் ஞானபீடம் விருது வென்ற எழுத்தாளர் அகிலன் போன்ற ஆளுமைகள் பிறந்த மாவட்டம் என்ற பெருமைகளைப் பெற்றது புதுக்கோட்டை.

நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்காததால் வானம் பார்த்த பூமியாகிருக்கிறது. விவசாயம் தவிர வேலைவாய்ப்புக்கு வழியில்லாத மாவட்டத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்; மாவட்டத்தில் உள்ள தைலமரக்காடுகளை அழித்து அங்கு பல்லுயிர் பெருக்க காடுகளை உருவாக்க வேண்டும்; மலைப்பாம்புகளுக்கு மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும், தொன்மையான இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன.

புதுக்கோட்டையில் இருக்கும் ஆறு தொகுதிகளில் மூன்றை திமுகவும், மூன்றை அதிமுகவும் வைத்துள்ளன. அமைச்சரின் தொகுதி, காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலமாக திருமயம் தொகுதிகளில் அதிமுகவின் கை ஓங்கி இருந்தாலும், பல தொகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததால் ஆட்சிக்கெதிரான மனநிலையும் நிலவுகிறது. இதனால் கட்சிகளின் வெற்றி தோல்விகளை அனுமானிப்பது சிரமமே.

ABOUT THE AUTHOR

...view details