புதுக்கோட்டை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை காணொலிக்காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ரூ.28 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்படவுள்ள 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு கலந்துகொண்டார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை வரவேற்க ஆசிரியர்களின் ஏற்பாட்டில் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் காலணி அணியாமல் இருப்பதைப் போல், பள்ளியின் நுழைவாயிலில் காலணி அணியாமல் வரிசையாக நின்று வரவேற்றனர். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு காரில் வந்து இறங்கி பள்ளி வளாகத்திற்கு நுழையும் போது மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.