கரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாளை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதையடுத்து மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், "வெளிநாடுகளிலிருந்து இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 330. யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் அறிந்து கொள்ள 24 மணி நேரமும் இலவசமாக இயங்கக்கூடிய தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையுடன் இணைந்து செயல்பட்டுவருகிறோம். மக்களுக்கு ஏதேனும் தகவல்களோ, புகார்களோ இருந்தால் 1077222207 என்ற இலவச எண்ணை தொடர்புகொள்ளலாம்.