மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகளை அஞ்சலக அலுவலர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலரான உமா மகேஸ்வரி வழங்கினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயது நிறைந்த இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் அட்டையில், வாக்காளர் உதவி எண்ணாண 1950 மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1800 425 8541 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. மொத்தம் 40,000 தேர்தல் விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகளை, கடந்த தேர்தலின்போது குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் அஞ்சல் அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும்படை, 3 நிலையான கண்காணிப்புக்குழு, 2 வீடியோ கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையின் மூலம் சுமார் 19 லட்ச ரூபாய் பணம், நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக மாவட்டத்தில் இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரிதெரிவித்தார்.