புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஜெயம். இவருக்குத் திருமணமான இரண்டு மகள்களும் திருமணம் ஆகாத ஒரு மகளும் உள்ளனர். கடந்த மாதம் லட்சுமணன் என்பவர் ஜெயமிடம் வெளிநாட்டில் வீட்டு வேலை செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைக் கூறி 70 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு அவரை மஸ்கட்டிற்கு அனுப்பியுள்ளார்.
வெளிநாடு சென்ற ஜெயமை- பார்வதி, பாத்திமா, காசிம், அக்கீம் ஆகியோர் அழைத்துச்சென்று ஒரு அறையில் அடைத்துவைத்து, 'இரண்டு லட்சம் பணம் தந்தால்தான் நீ மீண்டும் இந்தியாவிற்குச் செல்ல முடியும்' என்று கூறி சித்ரவதை செய்துள்ளனர்.
ஜெயமின் உறவினர்கள் அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, இரண்டு லட்சம் பணம் தந்தால்தான் தன்னை விடுவிப்பதாக அவர்கள் கூறியதை தெரிவித்துள்ளார். இது குறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பெண்ணை வெளிநாட்டிற்கு வரவைத்து மிரட்டல் இது குறித்து ஜெயமின் மகள் ஜெயந்தி, "எங்களுக்குத் திருமணமாகாத ஒரு சகோதரி இருக்கிறாள். அவளை நல்ல முறையில் திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எனது தாய் வெளிநாடு செல்ல வேண்டும் என முடிவெடுத்தார். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வேதனை அளிக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் எனது தாயார் வீட்டிற்கு வர வேண்டும், அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ரூ. 22 லட்சம் மதிப்புள்ள தங்க தலைப்பாகை!