காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, இன்று அக்டோபர் மூன்றாம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்ட நாளான இன்றே இரண்டாம் பருவப் புத்தகங்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டதன் பேரில், புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு ராஜவீதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு அம்மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி புத்தகங்களை இன்று வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பள்ளி வளாகத்தினை ஆய்வு மேற்கொண்போது, அங்கே விறகு அடுப்பைக்கொண்டு சத்துணவு சமைக்கப்பட்டது அவருக்குத் தெரியவந்தது. இதையடுத்து இரண்டு சிலிண்டர்கள் இருந்தும் விறகு அடுப்பில் ஏன் சமையல் செய்கிறீர்கள் என, ஆட்சியர் உமா மகேஸ்வரி கேள்வி எழுப்பியபோது ”சிலிண்டர் புக் செய்யவில்லை, அதனால் விறகு அடுப்பில் சமைக்கிறோம்” என்று பணியாட்கள் பதிலளித்ததால் கோபமடைந்தார். தொடர்ந்து, ”சிலிண்டரை புக் செய்யாமல் விறகு அடுப்பிலேயே பணியைத் தொடர்ந்தால், பணி மாறுதல் செய்யப்படுவீர்கள், கவனமாக வேலை செய்யுங்கள்” என அங்கே வேலை செய்த பணியாட்களை எச்சரித்தார். தொடர்ந்து சமையல் அறையை முழுவதுமாக ஆய்வு செய்தபின், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அலுவலகம் திரும்பினார்.