புதுக்கோட்டை மாவட்டத்தில், போஸ் நகர்ப் பகுதியில் சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மைதானம் போல, இருந்த இந்த இடத்தில் துப்புரவுப் பணியாளர்கள் வீடுகளில் பெறப்படும் குப்பைகளைக் கொண்டு வந்து, கொட்டத் தொடங்கி, தற்போது அது பெரிய குப்பைக் கிடங்காக மாறியுள்ளது.
இதன் அருகிலேயே அங்கன்வாடி பள்ளி, காவல் நிலையம், குடியிருப்புகள் என அனைத்துமே இருக்கிறது. இந்த குப்பைக் கிடங்கில் இருந்து வரும் புகையும் துர்நாற்றமும் தூசியும், அப்பகுதியில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடனான சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் அருகில் உள்ள மின்சார சுடுகாட்டில் புகைப்போக்கி பழுதடைந்து இருப்பதால், பிணம் எரிக்கும் புகை நேரடியாக குடியிருப்புகளுக்குள் செல்வதாலும் அப்பகுதியினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.500 பரிசு...' - பலே அறிவிப்பு வெளியிட்டுள்ள ஊராட்சி!
இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது என்று கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி பெண்கள் தெரிவித்ததாவது, "எங்களது குழந்தைகளை வாரத்தில் நான்கு நாட்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது" எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கூறுகையில், "சுகாதாரச் சீர்கேடு என்றால் எங்களது பகுதியில் இருக்கும் இந்த குப்பை கிடங்கால் தான் உருவாகுகிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் ஊரோடு நோய் வந்து சாக வேண்டியது தான் அல்லது நாங்கள் வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். ஏனென்றால் பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறினார்.
ஏற்கெனவே இப்பகுதியில் சுற்றியும் வளர்ந்து கிடந்த கருவேல மரங்களை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து அகற்றி சுத்தம் செய்து, சிறுவர்கள் விளையாடும் மைதானமாக மாற்றியுள்ளனர். இதுபோன்ற நகராட்சிப் பணியையும் தாங்களே செய்தால், பிறகு எதற்கு தான் அரசாங்கம்? எதற்கு தான் நகராட்சி? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இங்கு வந்து குப்பை கொட்டும் பணியாளர்களை சிறைப் பிடிப்பதாகவும்; மேலும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் தகவல் குறித்து நகராட்சி நல அலுவலர் யாழினியிடம் கேட்டபோது, ' இவ்விவகாரம் தற்போதுதான் தெரியவந்துள்ளது எனவும்; கூடிய விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
குடியிருப்புகளுக்கு நடுவே குப்பைக்கிடங்கு - நடவடிக்கை எடுக்குமா நகராட்சி? இதையும் படிங்க:மாநகராட்சி குப்பைக் கிடங்கில் பசுமைத் தீர்ப்பாய அலுவலர் ஆய்வு!