புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் 108 ஆம்புலன்ஸ் சேவை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், " புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியைச் சேர்ந்த வேலை வாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் வேலைவாய்ப்பை பெறும் வகையில் 108 ஆம்புலன்ஸ் சேவை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் நடைபெறும் இம்முகாமில் மருத்துவ உதவியாளர்கள் 400 பேர், ஓட்டுநர் 400 பேர் என மொத்தம் 800 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகிறது. தற்பொழுது முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ரூ.103 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 500 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ்கள் இயங்க உள்ளன.