புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலெட்சுமி. ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் இவர் அமெரிக்காவின் go4guru என்ற நிறுவனம் நடத்திய சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் வெற்றிப்பெற்று நாசா விண்வெளி ஆய்வு மையம் செல்லத் தேர்வாகியுள்ளார். நாசா செல்ல வாய்ப்புக் கிடைத்தும் அமெரிக்கா சென்றுவர பணமில்லாததால் தவித்துவருகிறார்.
இதுகுறித்து மாணவி ஜெயலட்சுமி, "எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அப்பா முந்திரி விவசாயம், அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவர். சிறுவயதிலிருந்தே விண்வெளிப் பற்றி தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. நாசா செல்ல go4guru எனும் நிறுவனம் அறிவியல் தேர்வு நடத்திவருவதாக செய்தித்தாளில் படித்தேன். கணினி மூலம் தேர்வென்பதால், சித்தப்பாவின் கைப்பேசியில் தேர்வெழுதி தேர்ச்சிபெற்றேன்.