தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடு, கோழி திருட்டு முதல் கொலை வரை.. 4 ஆண்டுகளாக தொடரும் அவலம்.. புதுக்கோட்டை இம்னாம்பட்டியில் நடப்பது என்ன?

Pudukkottai Theft issue: நான்கு வருடங்களாக தொடர் திருட்டு மற்றும் கொலை சம்பவத்தால் தூக்கத்தை தொலைத்த இம்னாம்பட்டி கிராம மக்கள் புகார் கொடுத்தும் போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இம்னாம்பட்டி கிராமத்தில் தொடரும் திருட்டு
இம்னாம்பட்டி கிராமத்தில் தொடரும் திருட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 1:43 PM IST

Updated : Sep 10, 2023, 3:35 PM IST

இம்னாம்பட்டி கிராமத்தில் தொடரும் திருட்டு

புதுக்கோட்டை:ஆலங்குடி தாலுகா, வேப்பங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்டது இம்னாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கட்டட வேலை, மரம் வெட்டுவது, செங்கல் சூளையில் என கூலி தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இம்னாம்பட்டி கிராமத்தில் சுமார் நான்கு வருடங்களாக வீட்டில் வளர்க்கக்கூடிய கோழி, ஆடு, மாடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இதுபோன்ற கால்நடைகளை, திருடர்கள் திருடி செல்கின்றனர். மேலும், கால்நடைகள் மட்டுமின்றி வீட்டில் உள்ள பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் அதிகளவு திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கால்நடைகள் திருடப்படுவதால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பணம், நகை திருடப்படுவதால் தங்களது வாழ்க்கையே சீரழிந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். பணம், நகை திருடப்படும் சூழ்நிலையில், சில நேரம் கொலை சம்பவமும் இந்த இம்னாம்பட்டி கிராமத்தில் அரங்கேறியுள்ளது. குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி, இதே ஊரைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க வீரம்மாள் என்ற மூதாட்டி நகைக்காக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

கொலை சம்பவம்:அதனைத் தொடர்ந்து இதே பாணியில் இரண்டு மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் இந்த பகுதியில் நடந்தேறிய நிலையில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் இதே ஊரைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் இறந்து விட்ட நிலையில், அவரது மனைவி மாரிக்கண்ணு பராமரித்து வந்த நாட்டுக்கோழி பண்ணையில் இருந்த 300 கோழிகளும், 200 முட்டைகளும் திருடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரம் இதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருடைய வீட்டில் கட்டி இருந்த மூன்று ஆடுகள் இரவு ஒரு மணி அளவில் காணாமல் போனது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து விசாரிக்கும் போது, அவர்கள், அருகே நடைபெற்று வரும் வார சந்தைகளில் போய் பாருங்கள் என்று கூறியதையடுத்து, ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவியும் ஒவ்வொரு சந்தையாக ஆடுகளை தேடி அலைந்துள்ளனர்.

அப்போது விராலிமலை வாரச்சந்தையில் ஆடுகளை தேடி அலைந்து கொண்டிருக்கும்போது, ரவிச்சந்திரனும் அவரது மனைவியும் அந்த ஆடுகளின் பெயரைக் கூறியும், அவர்கள் அழைக்கும் சைகையின் மூலம் சப்தம் போட்ட போது, இவர்களது இரண்டு ஆடுகள் ரவிச்சந்திரனை நோக்கி வந்துள்ளது. அப்போது ரவிச்சந்திரன் இதைபற்றி விசாரிக்கையில், இந்த ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர் பெயர் கணேசன் என்பதும், அந்த ஆடுகளை ஏற்றி வந்த வாகனம் தேனி மாவட்டத்தின் பதிவெண் என்பதும் தெரிய வந்துள்ளது.

கொலை மிரட்டல்: இதனையடுத்து கணேசனிடம் இவர்கள் விசாரணை நடத்திய போது, “கணேசன் நான் ஆடுகளை மற்றவர்களிடம் இருந்து தான் வாங்கினேன். உங்களது ஆடுகளாக இருந்தால் நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். ஆனால் சத்தம் போட்டு பிரச்சனை செய்யாதீர்கள்” என்று கூறி ஆடுகளை ரவிச்சந்திரனுடன் அனுப்பி வைத்துள்ளார். ரவிச்சந்திரன் இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிப்பதாக அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிவகங்கையில் இருந்து பேசுவதாக கூறிய ஒருவர் ஆடு வந்து விட்டது. மேலும் இது குறித்து, நடவடிக்கை எடுத்தால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார். இவ்வாறு, இம்னாம்பட்டி கிராமத்திற்குள் கடந்த நான்கு வருடங்களாக திருட்டு, கொள்ளை, கொலை ஆகிய குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:Chandrababu Naidu : சிறப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்... நீதிமன்ற காவலா?

Last Updated : Sep 10, 2023, 3:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details