புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பரம்பரையின் குலதெய்வக் கோயிலான ஸ்ரீ பிரகதாம்பாள் குடைவரை கோயில் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இங்குள்ள சுமார் ஐந்து ஏக்கர் நிலம் நந்தவனம் என்ற பெயரில் அறியப்படுகிறது. இயற்கை எழில்மிகு தோற்றத்துடன் பூச்சிகள், பறவைகள், சிறிய உயிரினங்களின் அடர்த்தியான தொகுப்புடன் காட்சியளித்து வந்த நந்தவனம் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தால் உருக்குலைந்து போனது.
'நந்தவனம் குப்பை மேடு ஆன கதை' - சீரமைக்க வலியுறுத்தல்! - Pudukkottai
புதுக்கோட்டை: வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலயத்தின் நந்தவனம் பகுதியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நந்தவனத்தில் இருந்த குளம் தற்போது குப்பை மேடாக காட்சியளிப்பதோடு தூர்வாரப்படாமல் அழிவின் விளிம்பில் உள்ளது. கஜா புயலின் போது சாய்ந்த மரங்கள் தற்போது வரை அப்புறப்படுத்த படாமலும் நந்தவனம் அமைந்துள்ள பாதுகாப்பு வேலிகள் சேதமடைந்து இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர் ராமராஜனிடம் கேட்டபோது, தமிழ்நாட்டிலேயே கோயில்கள் அதிகமாக இருக்கும் ஊர் புதுக்கோட்டை தான் எனவும், அனைத்து கோயில்களையும் பராமரிக்க தங்களுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், அரசு ஒதுக்கும் நிதி அனைத்து கோயில்களையும் பராமரிக்க போதுமானதாக இல்லை என்று கூறிய அலுவலர் ராமராஜன், நந்தவனம் பகுதி மிகவும் அழகான பகுதி அதனை விரைவில் சீரமைப்போம் எனவும் உறுதியளித்தார்.