புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்து கல்லாக்கோட்டை என்ற கிராமம் உள்ளது. அங்கு தனியார் மதுபான ஆலை நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. தற்போது மது உற்பத்திக்காக பெரிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் தனியார் மதுபான ஆலை மூடக்கோரி போராட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தனியார் மதுபான ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யபட்டுள்ளனர்.
மேலும், ஆலைகளிலிருந்து கழிவுநீர் அதிக அளவில் வெளியேற்றப்படுவதால் அங்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் மது ஆலையை மூடக்கோரி கோரிக்கை விடுத்தும் அரசு செவிசாய்க்காததால் மகளிர் ஆயம் என்ற அமைப்பு சார்பில் 250க்கும் மேற்பட்டோர் கல்லாக்கோட்டை பகுதியில் இருந்து ஆலை வரை ஊர்வலமாக சென்று ஆலைக்கு முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றுள்ளனர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மகளிர் ஆயம் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் வந்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் ஆயம் அமைப்பின் தலைவர் லட்சுமி அம்மாள் உட்பட 250க்கும் மேற்பட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.