புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்தவர் துரை குணா(41). இவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் மிகுந்தவர். கடந்த ஆண்டு நடிகர் வடிவேலு பாணியில், குளத்தை காணவில்லை என்றும் அதை கண்டுபிடித்து தருமாறும் உயர்மட்ட அலுவலர்களுக்கு மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம், புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் தனிநபர்களின் ஆக்கிரமிப்பால் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்றக்கோரி வருவாய் துறையினரிடம் புகார் மனு அளித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக, வருவாய் துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து கோரிக்கை விடுத்த இவர், வருவாய் துறையினர் அலட்சியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக நேற்று முன்தினம் (செப்டம்பர் 15) போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "வரும் 28ஆம் தேதி கறம்பக்குடி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தனி நபர்களால் கட்டப்பட்ட வழிபாட்டுதல கட்டடங்களை வருவாய் (நி.மு. 6(2) துறை, அரசாணை (நிலை) எண் 437-இன் படி அகற்றுவது எப்படி? என்று ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு எடுக்கப்படும்" என குறிப்பிட்டிருந்தார்.