புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக கட்டடத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வணிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, ‘தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், அரசியல்வாதிகள் எங்கெங்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்பது தெரிந்தும்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்பாவி வணிகர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவது கண்டிக்கத்தக்கது. நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளின் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல் அப்பாவி வியாபாரிகளை துன்புறுத்துகின்றனர்.
தேர்தல் அலுவலர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சிறு குறு வணிகர்கள் கொண்டுவரும் நோக்கத்திற்கு ஆதாரங்கள் இருந்தும் அதனை பறிமுதல் செய்கின்றனர், இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக தேர்தல் ஆணையம் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதே நிலை தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் பிரச்சினையானது வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து சென்னையில் வரும் 20ஆம் தேதி ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.