புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு கடந்த 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக விளங்குகின்றது. போலியோவை முழுமையாக ஒழித்ததால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்க, மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்து, அதன்படி 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக 2 லட்சம் பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளனர். அதுமட்டுமின்றி ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 1652 மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இதைத்தவிர வெளி மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் பயனடையும் வகையில் 1000 நடமாடும் குழுக்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறையில் இறுதி நாள் என்பதால் நாளை சொட்டு மருந்து கொடுக்காமல் சில குழந்தைகள் விடுபட்டால் அடுத்த இரண்டு நாட்களுக்கு வீடு தேடி மருந்து வழங்க மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.