புதுக்கோட்டை:மதவழிபாட்டு தலங்கள் மற்றும் மருத்துவமனைகள் இருப்பதால், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை, நகரின் முக்கிய வணிக சாலையான கீழ ராஜ வீதி வழியாக செல்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை பயணம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நேற்று (நவ. 5) தனது பயணத்தை மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கந்தர்வகோட்டை மற்றும் சட்டமன்ற தொகுதியில் அவர் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக புதுக்கோட்டை நகர எல்லையான அண்டக்குளம் விளக்கில் இருந்து பிருந்தாவனம், கீழ ராஜ வீதி வழியாக நடை பயணம் மேற்கொண்டு அண்ணா சிலை அருகே சிறப்புரையாற்ற, பாஜக நிர்வாகிகள் புதுக்கோட்டை காவல் துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனர்.
20 நாட்களுக்கு முன்னரே காவல்துறையிடம் அனுமதி கோரி இருந்த நிலையில், புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் மருது கணேஷ், ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு சென்று, கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமாரிடம், கீழ ராஜ வீதி வழியாக பாதயாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது என்றும் அதற்கான விளக்கக் கடிதம் ஒன்றை கொடுத்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.