புதுக்கோட்டை:புதுக்கோட்டை நகரில் மாலையீடு, கேஎஸ்எம் நகரில் வசித்து வருபவர் மாணிக்கம். இவருக்கு மீனா என்ற மனைவியும், விஜயகுமார் என்ற ஒரு மகனும், ரேவதி, கீதா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மகன் விஜயகுமார், மகள் கீதா இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதில் ரேவதி(40) மட்டும் திருமணமாகாமல் கடந்த 10 வருடங்களாக புதுக்கோட்டை இராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக ரேவதியுடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் 40 வயதாகியும், ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை எனக்கேட்டு, கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரேவதி, வேலைக்குப் போக பிடிக்கவில்லை என பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என பெற்றோர்கள் ஆறுதல் கூறி வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த மன உளைச்சலில் ஆசிரியர் ரேவதி பள்ளிக்குச் செல்லாமல் ஒரு மாதம் லீவு போட்டு விட்டு வீட்டில் இருந்துள்ளார். அதன் பிறகு ஜனவரி மாதத்தில் மட்டும் இரண்டு நாட்கள் பணிக்கு சென்றுவிட்டு ரேவதி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி காலை 9 மணி அளவில் இட்லி சாப்பிட்ட ரேவதி, சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.
ரேவதிக்கு உடல்நிலை சரியில்லை என நினைத்த அவரது பெற்றோர் ஆட்டோவில் அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பிறகு ரேவதியிடம் பெற்றோர் விசாரித்தபோது, எல்லோரும் ஏன் திருமணமாகவில்லை என கேட்டு கேலி கிண்டல் செய்வதாகவும், இதனால் தான் மன உலைச்சலில் இருப்பதாகவும், இதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார்.