பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் சோமாயா என்ற தீவில் உள்ள அபியா என்ற இடத்தில் நடைபெற்றது. இதில், மகளிர் 87 கிலோ எடைப் பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த அனுராதா பங்கேற்றார். இவர் இப்போட்டியில் ஸ்னாச் முறையில் 100 கிலோவும், கிளன் அண்ட் ஜெர்க் முறையில் 121 கிலோ என மொத்தம் 221 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தந்த விவசாயி மகள் - அனுராதா
புதுக்கோட்டை: காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற அனுராதா குறித்து சிறு தொகுப்பு.
சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த, இவர் MCA பட்டதாரி ஆவார். தனது பள்ளிப் படிப்பு முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் முடித்த இவர், முதுகலை பட்ட படிப்பை தனியார் கல்லூரியில் இந்த ஆண்டில் முடித்துள்ளார். தான் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போதே மாநில அளவிலான பளு தூக்குதல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.அதன் மூலம் காவல்துறையில் பணி வாய்ப்பையும் பெற்றார். அனுராதாவின் இந்த வெற்றியை கேட்டதும் அவரது சொந்த ஊரில் உள்ள மக்கள் பட்டாசு வெடித்தும் பிளக்ஸ் வைத்தும் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து அவரது தாயாரும் சகோதரரும் கூறியதாவது, "நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து வந்தோம். அனுராதா சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தையார் இறந்துவிட்டார். அதன் பிறகு கூலி வேலை செய்து அவரை படிக்க வைத்தேன். சிறு வயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால், அவருக்கு தேவையானதை செய்தோம். அவருக்கு வேலை கிடைத்ததும் குடும்பத்தில் கஷ்டம் நீங்க தொடங்கியது. அவர் தற்போது தங்கப் பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசுதான் இது என்று கண்ணீர் மல்க சந்தோஷத்தை தெரிவித்தனர்.