தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா பரவலின் தொடக்கத்தில் சென்னையில் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருந்தது. தற்போது சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று(ஜூலை 11) புதுக்கோட்டை இராணியார் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி கோவிட் 19 நோயாளிகளுக்கு அதிநவீன உபகரணங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று உயிர்காக்கக்கூடிய புதிய மருந்துகளையும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் கரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும்.
கிண்டி கிங்ஸ் மருத்துவமனை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் இதுவரை 49 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனை மையங்கள், ஆக்ஸிஜன் பைப்லைன் அமைக்கும் பணி பொதுப்பணித்துறை மூலம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒருவருக்கு 60 லிட்டர் அளவிற்கு ஆக்ஸிஜன் கொடுக்கக்கூடிய புதிய கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளது.